Wednesday, 30 September 2015

மருத்துவம் செய்ய வேண்டியது நோய்க்கு அல்ல, நோயாளிக்கே

Dr.Jeromeஇன்றும்கூட நம்நாடு முழு படிப்பறிவை எட்டிய நாடு அல்ல. எல்லாத் துறைகளிலும் அறியாமை நமக்கு இருந்தாலும் கூட, மருத்துவ துறையில் பொதுமக்களுக்கு தற்குறித்தனம் அதிகமாகவே உள்ளது.
பிள்ளைகள் 30 வயது வரும் வரை கூட அவர்களை பெற்றோர் தங்கள் கட்டுப்பாட்டில்தான் வளர்க்கின்றனர். மருத்துவத்தில் கூட ஏதாவது தீவிர நோய் நிலையில்தான் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறார்களே தவிர மற்றபடி ஏதாவது உடல் பிரச்சனை வந்தால், “ பெரியப்பா சொன்னார்…., சித்தி சொன்னார்… “ என்று மருத்துவம் ஆரம்பிக்கிறார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை பெரியப்பாதான் பொது மருத்துவர், அவர் ஒரு சிறப்பு மருத்துவரைப் பரிந்துரைப்பார். அந்த சிறப்பு மருத்துவர் யார் தெரியுமா? ஏற்கனவே அந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒன்றுவிட்ட சித்திதான் அந்த சிறப்பு மருத்துவர். இப்படியாக நோய் முற்றும் வரை சிகிச்சை தொடரும். இவர்களைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட மருந்து உள்ளது, அதை எடுத்துக் கொண்டால் அந்த நோய் குணமாகிவிடும் என நினைக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல. நோய் வேறு, நோயாளி வேறு.
நோய்க்கும் நோயாளிக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது மிகவும் அடிப்படையான ஒன்று. அதை விளக்குவதற்கே இந்தக் கட்டுரை.
ஒரு நோயை உதாரணமாக வைத்து நோய்க்கும் நோயாளிக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறேன்.
sidhdha5

கல்லடைப்பு அதாவது சிறுநீரக கல் என்று நோயை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். சிறுநீரகக் கல்லுக்கு ‘இதுதான் மருந்து’ என உடனே முடிவுக்கு வந்துவிடக்கூடாது. அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமானால் மருத்துவரே தேவையில்லையே. வலி வந்தவுடன் ஒரு பரிசோதனை மையத்தில் நுண்கதிர் சோதனை (Scan -ஸ்கேன்) செய்துவிட்டு, சிறுநீரகத்தில் கல் இருக்கிறது என தெரிந்தவுடன் ‘அந்த மருந்தை’ சாப்பிட்டு கல்லை கரைத்து விடலாமே.
“அப்படியெல்லாம் மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது அது தவறு” என நீங்கள் மனதில் நினைப்பது சரி. ஆனால் இப்படி ஒரு அரை வேக்காட்டுத்தனம் மக்களிடையே பரவி வருகிறது என்பது உண்மை.
இப்படிப்பட்ட தவறான, ஆபத்தான தகவல்களை பரப்பும் வேலையை ஊடகங்களே செய்து வருகின்றன. “சிறுநீரகக் கல்லா…. கவலை வேண்டாம்… முள்ளங்கி இரண்டு எடுத்து…” என மருத்துவக் குறிப்பு எழுதுவதை சிலர் பொழுதுபோக்காகவே கொண்டுள்ளனர். ஒரு சில தொலைக்காட்சிகளில் கூட இப்படிப்பட்ட கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
“இதையும் சிலர் கடைப்பிடித்துவிட்டு, சித்த மருந்து சாப்பிட்டேன், சரியாகவில்லை பிறகு அறுவை சிகிச்சை செய்து கல்லை எடுத்தனர்.” என அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
சரி, இப்படி மருத்துவம் செய்து கொள்பவர்களில் ஒரு சிலருக்கு கல் கரைகிறது, சிலருக்கு கரைவதில்லை ஏன் அப்படி என நீங்கள் கேட்கலாம். இங்குதான் நோய் வேறு, நோயாளி வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இங்கு நோய் என்பது  – சிறுநீரக கல்
நோயாளிகள் – வாத உடலினர்
-பித்த உடலினர்
- கப உடலினர்
ஆக நோய் ஒன்று நோயாளிகள் மூன்று விதம்
(இது போல இன்னொரு விதமான கல்லும் உருவாகும். அதைப் பற்றி இந்த நோய்க்கான கட்டுரையில் எழுதுவேன்)
sidhdha4இதில் அவர்கள் உடல்நிலை மட்டுமல்ல, அதனால் ஏற்படுகின்ற சிறுநீரகக் கல்லும் மூன்று விதமாக உருவாகும்.

வாத உடலினருக்கு ஒரு வித கல்லும், பித்த உடலினருக்கு வேறு வித கல்லும், கப உடலினருக்கு வேறுவித கல்லும் உருவாகின்றன. இந்த மூன்று பேருக்கும் ஒரே விதமான மருந்தைக் கொடுத்தால் ஒரு சிலருக்கு குணமாகும், ஒரு சிலருக்கு குணமாகாது. இந்த வேறுபாட்டை மருத்துவராலேயே கணிக்க முடியும். இந்த நோய் கணிப்பு (Diagnosis) பத்திரிக்கையில் மருத்துவக் குறிப்பு எழுதும், அல்லது தொலைக்காட்சியில் பாட்டி வைத்தியம் கூறும் அரை வேக்காடுகளுக்குத் தெரியாது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் படிப்பவர்களும், பார்ப்பவர்களுமே.
ஒரு மருத்துவக் குறிப்பைப் படிக்கும் போது அதை எழுதியது யார்? அவருக்கு அந்த துறை சார்ந்த தகுதி இருக்கின்றதா? என தெரிந்து கொள்ள வேண்டும்.
sidhdha2மீண்டும் சிறுநீரகக் கல்லுக்கு வருவோம். வாத சிறுநீரக கல்லில் மேற்புறம் முற்கள் போன்று இருக்கும். இது கருப்பாக இருக்கும் இவர்களுக்கு சிறுநீர் பையில் வலி இருக்கும். இவர்களுக்கு ஒரு வித முறையில் சிகிச்சை ஆரம்பித்து மருந்து கொடுக்க வேண்டும்.
sidhdha1பித்த சிறுநீரகக் கல் சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இவர்களுக்கு சிறுநீர்ப்பையில் கொதிப்பும் எரிச்சலும் இருக்கும்.இவர்களுக்கு ஒரு வித முறையில் சிகிச்சை கொடுக்க வேண்டும்.
sidhdha3கப சிறுநீரகக் கல் வெள்ளையாக வழவழப்பாக இருக்கும், சிறுநீர்ப்பை குளிச்சியாக இருக்கும். அந்த இடத்தில் ஊசி குத்துவது போல வலி இருக்கும்.
இந்த மூன்று வித, கற்களின் வேதியியல் மூலக் கூறுகளும் (Chemical composition) ஒன்றுக்கொன்று வேறுபடும். இதனால்தான் எல்லோருக்கும் அந்த பொது மருந்து ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை.
பற்பம், சுண்ணம், குடிநீர் என பல விதமான மருந்துகளில் எதை யாருக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என மருத்துவருக்குத் தெரியும்.
(ஒரு உதாரணத்திற்காகத்தான் சிறுநீரகக் கல்லை இங்கே எழுதினேனே தவிர இந்த நோயைப் பற்றிய கட்டுரை அல்ல இது)
எனவே எந்த நோயையும் குணமாக்குவதற்கு அந்த நோயாளியின் உடல் நிலைமை முதலில் தெரிந்து பிறகு மருத்துவம் செய்ய வேண்டும்.
வெறும் பரிசோதனை முடிவுகளை (Scan, Blood test, Xray) மட்டும் வைத்து சிகிச்சை செய்து விட முடியாது, இதைத்தான்

“நோய் நாடி, நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்”
என்றார் நம் பாட்டன்.
ஆக, மருத்துவம் செய்ய வேண்டியது நோய்க்கு அல்ல, நோயாளிக்கே.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

மருத்துவம் என்றாலே அது செயற்கைதான்

Dr.Jerome
இப்போதெல்லாம் இயற்கை மருத்துவம், இயற்கை விவசாயம், இயற்கை உணவு என்று பேசுவது வாடிக்கையாகிவிட்டது. என்ன புரிகிறதோ இல்லையோ இதைப்பற்றி பேசுவதும், கேட்பதும் சிலருக்கு ஒருவித மகிழ்ச்சியைத் தருகிறது.
இயற்கை என்றாலே ஏதோ இன்பமயமானது எனவும், செயற்கை என்றாலே ஏதோ கொடூர முகம் கொண்டது என்பது போலவும் ஒரு உருவகத்தை இவர்கள் மனதில் ஏற்படுத்திக் கொள்கின்றனர். அது அப்படியல்ல என்பதை விளக்கத்தான் இந்த கட்டுரை. ஒரு விளக்கத்திற்காக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன்.
ஒரு மரம் நிற்கிறது. – இது இயற்கை
வேகமாக காற்று வீசுகிறது – இது இயற்கை
அதனால் மரத்தின் ஒரு கிளை முறிந்து விடுகிறது – இது இயற்கை
இவை அனைத்தும் இயற்கைதானே. இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லையே.
அதைப் போலத்தான், பிறப்பு, இளமை, இன்பம், பிணி, மூப்பு, மரணம் இவை அனைத்தும் இயற்கைதானே. இவற்றில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லையே.
இவையெல்லாம் இயற்கை என்றால் இதில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லையே. அப்படியிருக்க பிணி வந்தவுடன் ஏன் அதை எதிர்த்து மருத்துவம் செய்ய வேண்டும்? நோய் ஒன்றும் செயற்கை இல்லையே…
maruththuvam3
வரிசைப்படி பார்த்தால்:
  1. பிறப்பு
  2. இளமை
  3. இன்பம்
  4. பிணி(நோய்)
  5. மூப்பு (வயதாவது)
  6. சாக்காடு (மரணம்)
என்ற ஆறும் அனைவருக்கும் இயற்கையாக நிகழக் கூடியவைதானே.
ஏன் இந்த ஆறை குறிப்பிடுகிறேன் என்றால்,
“பேறு இளமை இன்பம் பிணிமூப்பு சாக்காடு
ஆறுங்கருவிலமைப்பு”
என்ற ஒரு தத்துவம் சித்த மருத்துவத்தில் உள்ளது. இயற்கையாக நிகழ்கின்ற இந்த படிநிலைகளில் மருத்துவத்திற்கு என்ன வேலை இருக்கிறது? பதில் கூறுங்கள் இயற்கை உணர்வாளர்களே.
ஆக ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நோய் என்பது இயற்கையானதுதான் அதை எதிர்ப்பதுதான் மருத்துவம். எதற்காக மருத்துவம் செய்கிறோம்?
சகமனிதனின் வேதனையை போக்க வேண்டும் என்கிற மனிதத்தின் அடிப்படையில்தான் நிறைய மருத்துவ அறிஞர்கள் முயன்றார்கள்.
ஒருவர் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இயற்கையா செயற்கையா என்று விவாதித்துக் கொண்டிருப்பதல்ல மருத்துவ அறிவு.
maruththuvam 2
ஆக மருத்துவமே செயற்கையானதுதான்.
மருத்துவம் என்றாலே செயற்கைதான் என்ற பிறகு, அதில் இயற்கை மருத்துவம் என்பதற்கு என்ன இருக்கிறது?.
இறுதியாக நான் என்னதான் கூறவருகிறேன் என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.
இயற்கை இயற்கை என பேசுபவர்கள் சில யதார்த்த புரிதல்களைவிட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிடுவார்களோ என்ற பதற்றத்தில்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
மருத்துவத்தைப் பற்றி முழுமையாக தெரிந்தவர்களும் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். மருத்துவத்தைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களும் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இன்று இந்த ‘இயற்கை’ பிரச்சனையே அரைவேக்காட்டு மனிதர்களால்தான் உருவாகிறது.
“Half Knowledge is dangerous” என்று ஒரு பழமொழி உண்டு.
இனி சித்த மருத்துவத்திற்கு வருவோம்.
maruththuvam1சித்த மருத்துவம் என்பது மூலிகை மருத்துவம் அல்ல என்ற என்னுடைய கட்டுரையை நீங்கள் வாசித்திருப்பீர்கள். மிகச் சிறிய ஒரு உதாரணத்தை இங்கே குறிப்பிடுகிறேன். மிகவும் இயற்கை என கருதப்படும் பாலையும், தேனையும் எடுத்துக்கொள்வோம். ஏன் இந்த இரண்டையும் குறிப்பிடுகிறேன் என்றால், இவை இரண்டும் சித்த மருத்துவத்தில் மருந்துகளுடன் சேர்த்து கொடுக்கப்படும் துணை மருந்துகளாக பயன்படுபவை. இதில் பால் என்பது பசுவின் மடியிலிருந்து கிடைப்பது. மனிதன் குடிப்பதற்காகவா இயற்கை பசுவின் மடியில் பாலை சுரக்கச் செய்கிறது?
ஒரு மிருகத்தின் மடியில் சுரக்கும் பால் அதன் குட்டிக்கு என்பதுதானே இயற்கை. அதன் குட்டி தன் வாயால் தாயின் மடியிலிருந்து உறிஞ்சி குடிப்பதுதானே இயற்கை.
அப்படி இருக்கும் போது ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தின் மடியிலிருந்து பாலை கையால் பிழிந்து தான் குடித்துவிடுவது எவ்வளவு தூரம் இயற்கையிலிருந்து விலகிய செயல். எவ்வளவு தூரம் செயற்கையான செயல்!!!
இது செயற்கை மட்டுமல்ல, இரக்கமற்ற செயலும் அல்லவா?
இயற்கை உணவு என பேசுபவர்களுக்கு இது புரியவில்லையா. சரி தேனை எடுத்துக்கொள்வோம். பால் கறப்பதை விட கொடூரமானது தேன் கூட்டைக் கலைத்து தேனைத் திருடிக்கொள்வது.
ஆக தத்துவார்த்த ரீதியாகவே பாலையும் தேனையும் பயன்படுத்துவது செயற்கையான வாழ்வியல் முறைதான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் செயற்கையாக பால் பவுடரை தயாரித்துவிட்டால் உடனே இயற்கை ஆர்வலர்கள் அது இயற்கைக்கு விரோதமானது என பேச ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் அடிப்படையில் எது இயற்கைக்கு விரோதமானது.
சித்த மருத்துவத்தில் மூலிகைகள் மட்டுமல்லாது உப்புகள் (Salts), உலோகங்கள் (Metals), தாதுக்கள் (Minerals) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை இயற்கையில் கிடப்பவைதான் ஆனால் சித்த மருத்துவ அறிவியல் இன்னும் ஒரு படி மேலே சென்று இந்த மருந்துச் சரக்குகளையே செயற்கையாக செய்யும் வேதியியல் முறைகளை கொண்டுள்ளது.
siththa maruththuvam2கேட்பதற்கு உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்.
-               போகர் ஏழாயிரம்
-               சட்டமுனி சரக்கு வைப்பு
-               பாண்ட வைப்பு
-               அகத்தியர் அமுத கலைஞானம்
போன்ற நூல்களில் செயற்கையாக இந்த சரக்குகளை செய்கின்ற வழிமுறைகள் உள்ளன.
இவ்வாறு செயற்கையாக இந்த மருந்துச் சரக்குகளை செய்கின்ற முறைக்கு “சரக்கு வைப்பு” என்று பெயர். ஆக மருத்துவத்தில் இயற்கை என்று ஒன்றும் கிடையாது. அதற்குள் மேலே சொல்ல வேண்டுமானால்,
siththa maruththuvam4மருத்துவம் என்பதே செயற்கையானதுதான்.
இயற்கை இயற்கை என கூறிக்கொண்டு மருத்துவத்தின் அடிப்படை புறிதலில் இருந்தே விலகிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த கட்டுரை.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

சித்த மருத்துவம் நாட்டு மருத்துவமல்ல…

Dr.Jeromeஇந்தத் தலைப்பில் ஒரு சித்த மருத்துவராகிய நான் ஒரு கட்டுரை எழுதுவது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆகவே, இதற்கான விளக்கத்தைக் கூறுவதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்டு வைக்கிறேன்.
சித்த மருத்துவம் நாட்டு மருத்துவம் என்றால், எந்த நாட்டு மருத்துவம்;?
ஒரு வேளை சற்று யோசித்துவிட்டு, ‘தமிழ்நாட்டு மருத்துவம்’ என நீங்கள் பதில் அளிக்கலாம்.
இப்போது இன்னொரு கேள்வியையும் நமக்கு நாமே கேட்டுப்பார்ப்போம்.
siththa maruththuvaththil2
அலோபதி மருத்துவத்தின் தந்தை என ஹிப்போ கிரேடஸ் அழைக்கப்படுகிறார்.
samuel Christian Hahnemann
ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை என கிறிஸ்டியன் சாமுவேல் ஹனிமன் என்பவரை அழைக்கிறோம்.
அப்படி சித்த மருத்துவத்தின் தந்தை என யாரை அழைக்கலாம்?
இதற்கு சிலர் அகத்தியர் எனவும், சிலர் போகர் எனவும் கூறிவருகின்றனர். ஆனால் சித்த மருத்துவம் இப்படி ஒரு குறிப்பிட்ட நபரால் தோற்றுவிக்கப்படவில்லை. பல கணங்களாக (group) சித்த மருத்துவ அறிஞர்கள் இயங்கி வந்துள்ளனர். அதாவது கிட்டத்தட்ட ஒரு கல்லூரிபோல இயங்கி வந்துள்ளனர். ஒரு மருத்துவ அறிஞரிடம் பலர் மாணவர்களாக இருந்து மருத்துவம் கற்றிருக்கிறார்கள். இந்த மருத்துவ அறிஞர்களிடையே கருத்து பரிமாற்றம் நடந்திருக்கிறது. இப்படி பல்வேறு சித்த மருத்துவ அறிஞர்களின் புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்ட மருத்துவத் தொகுப்பே சித்த மருத்துவம்.
இப்படி முப்பதுக்கும் மேற்பட்ட சித்த மருத்துவ மாமேதைகளின் தேடலாலும் ஆராய்ச்சியாலும், எழுத்தினாலும் உருவான ஒரு மருத்துவமுறையே சித்த மருத்துவம்.
sidhdhaa1
ஒரு அறிமுகத்திற்காக அந்த மருத்துவ மேதைகளின் பெயரை குறிப்பிடுகிறேன்.
யூகிமுனி
போகர்
தேரையர்
வால்மீகர்
தன்வந்திரி
ரோமரிஷி
அகத்தியர்
புலிப்பாணி
கொங்கணர்
இடைக்காடர்
கோரக்கர்
பாம்பாட்டி சித்தர்
அழுகண்ணி சித்தர்
காலங்கி நாதர்
பூனைக் கண்ணர்
மச்சமுனி
கருவூரார்
திருமூலர்
சட்டநாதர்
கமலமுனி
இன்னும் சிலர்.
இவர்கள் அனைவரின் பங்களிப்பும் சேர்ந்ததுதான் சித்த மருத்துவம்.
sidhdhaa2சரி, இவர்கள் அத்தனை பேரும் தங்கள் புத்தகங்களை தமிழ் மொழியில்தான் எழுதினார்கள். அதனால்தான் சித்த மருத்துவத்தை தமிழ் மருத்துவம் என அழைக்கிறோம். ஆனால், இவர்கள் அத்தனை பேரும் இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்களா?, இவர்களின் மருத்துவ சிந்தனைகள், மருத்துவ ஆராய்ச்சிகள் அனைத்தும் இங்கேயே தோன்றி இங்கேயே வளர்ந்ததா?
இதென்ன புது கேள்வி என நீங்கள் கேட்கலாம்.
இவர்களில் ஒரு சிலரைப் பற்றிக் கூறுகிறேன் பாருங்கள்.
  1. அழுகண்ணி சித்தர்:

இவர் சீனாவைச் சேர்ந்தவர்.
  1. உரோம ரிஷி:

உரோம ரிஷி வைத்தியம் 500, உரோம ரிஷி பதினாறு, உரோமரிஷி முப்பது, உரோமரிஷி ஐம்பத்தி ஒன்று, உரோமரிஷி சுருக்கம், உரோமரிஷி ஊழிக்காற்று, உரோமரிஷி குறுநூல் ஐம்பது என்ற நூல்களை எழுதிய இவர் இத்தாலியைச் சேர்ந்தவர் (ரோம்).
  1. காலங்கி நாதர்:

இவர் சீனாவைச் சேர்ந்தவர்.
  1. சட்டமுனி:

சட்டமுனி நிகண்டு, சட்டமுனி 20, சட்டமுனி தாண்டகம், சட்டமுனி மூலசூத்திரம், சட்டமுனி வாக்கியம் ஆகிய நூல்களை எழுதிய இவர் இலங்கையைச் சேர்ந்தவர்.
  1. புண்ணாக்கீசர்:

இவர் கன்னடத்தைச் சேர்ந்தவர்.
  1. புலத்தியர்:

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
  1. பூனைக்கண்ணர்:

இவர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்.
  1. போகர்:

மிக முக்கியமான சித்த மருத்துவ மேதை இவர். பாஷாணங்களையும், தாது உப்புகளையும், உலோகங்களையும் எப்படி மருந்தாக்க வேண்டும் என்பதை மிக விரிவாகக் கூறிய ஒரு மருத்துவ அறிஞர் இவர். இவரின் புத்தகங்கள் பல. இவர் சீனாவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இவர் சீனாவிற்கு சென்றதற்கான, வந்ததற்கான குறிப்புகள் உள்ளன.
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பல மருந்துச் சரக்குகள் வெளிநாட்டில் மட்டுமே கிடைப்பவை. அவை பற்றியெல்லாம் இவரது புத்தகத்தில் விளக்கம் உள்ளது. இவரைப் பற்றி நிறைய கூறலாம். ஒரு வேதியியல் அறிஞராக சித்த மருத்துவத்திற்கு நிறைய செயல் முறைகளைக் கூறியுள்ளார்.
  1. தன்வந்திரி:

தன்வந்திரி தைலம் 500, தன்வந்திரி சிமிட்டு ரத்தின சுருக்கம் 360, தன்வந்திரி நிகண்டு, தன்வந்திரி வைத்திய காவியம், தன்வந்திரி கலைஞானம், தன்வந்திரி நாடி 72, தன்வந்திரி வைத்தியம் 200, இப்படி பல நூல்களை எழுதிய இவர் வட இந்தியாவைச் சேர்ந்தவர்.
ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது?
ஆங்கிலத்தில் Gentle minds think alike என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது மேன்மையானவர்கள் அனைவரும் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் சிந்திப்பார்கள்.
சாமானிய மனிதர்கள்தான் தங்களுக்குள் உயர்வு தாழ்வு (ego) பாராட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அறிவார்ந்தவர்கள் உலகம் எங்கும் சென்று இன்னொரு அறிவாளியிடம் மாணவனாக இருந்து கற்றுக் கொள்கிறார்கள்.
அதைவிட முக்கியம் தாங்கள் கற்றவற்றை மற்றவர்களுக்கு பயன்படும் விதத்தில் புத்தகங்களாக தந்திருக்கிறார்கள். இப்படி பல்வேறு நாட்டு அறிஞர்களின் படைப்புகளால் உருவானதுதான் சித்த மருத்துவம்.
இப்போது கூறுங்கள் சித்த மருத்துவம் நாட்டு மருத்துவம் என்றால் எந்த நாட்டு மருத்துவம்?
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

எல்லா நோய்களையும் சித்த மருத்துவத்தில் குணமாக்க முடியுமா?

Dr.Jeromeமருத்துவம் என்பது ஒரு அறிவியல். இன்று அறிவியல் துறை ஒரு துறையாக இல்லாமல் பல்வேறு துறையாக பிரிந்து வளர்ந்துள்ளது. அதிலும் மருத்துவ அறிவியல் மிக நுட்பமாக வளர்ந்து வருகிறது. கண்ணுக்கு ஒரு மருத்துவர், பல்லுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலைமாறி பல் மருத்துவத்திலேயே எத்தனை விதமான மருத்துவர்கள் பாருங்கள்.
siththa maruththuvaththil1
-               Orthodontist– பல் சீரமைப்பு நிபுணர்.
-               Periodontist – ஈறு நோய் நிபுணர்.
-               Oral Maxillofacial surgeon – வாய் முக அறுவை சிகிச்சை நிபுணர்
-               Pedodontist– குழந்தைகள் பல் மருத்துவர்
-               Gerodontist– முதியோர் பல் மருத்துவர்
-               Conservative dentist – வேர் சிகிச்சை நிபுணர் (பல் பாதுகாப்பு)
-               Community dentist – சமூக பல் மற்றும் வாய் நல மருத்துவர்.
-               Prostodontist– செயற்கை பல் கட்டும் நிபுணர்.
-               Implantologist – செயற்கை துளை பல் பொருத்தும் மருத்துவர்.
இது பல்லுக்கு மட்டும்தான். இப்படி ஒவ்வொரு மண்டலத்திற்கும் மிகவும் விரிவாக மருத்துவம் வளர்ந்துகொண்டே செல்லும் இக்காலத்தில் எல்லா நோய்களையும் சித்த மருத்துவத்தில் குணமாக்க முடியுமா?
இதே போல சித்த மருத்துவமும் வளர்ந்துள்ளதா?
siththa maruththuvaththil2நான் மேலே கூறியது போல மருத்துவம் என்பது ஒரு அறிவியல். ஆனால் அறிவியல் அறிஞர்கள் தோன்றி அறிவியல் பார்வையில் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன்பாக அதற்கு விடை காண முயன்றவர்கள் ‘தத்துவ அறிஞர்கள்’ (Philosophers). மருத்துவ அடிப்படையிலான கேள்விகளுக்குகூட தத்துவ அடிப்படையில் விடைகள் தேவைப்பட்டன. அப்படித்தான் மருத்துவமும் தோன்றியது. உதாரணமாக அலோபதி மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் ‘ஹிப்போகிரேடஸ்’ ஒரு தத்துவ மேதை தான். சித்த மருத்துவத்தின் அடிப்படை தத்துவமான பஞ்சபூதங்கள் (Elemental Theory) எனும் தத்துவத்தினை அவர் பதிவு செய்கிறார். அப்படியானால் உலகில் உள்ள எல்லா மருத்துவ முறைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான தத்துவ அடிப்படையில் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் அந்தந்த நாடுகளில் மற்ற துறைகளில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியின் விளைவாக வெவ்வேறு விதமாக வளர்ச்சி அடைந்துவிட்டன.
நுண்ணோக்கிகள் கண்டுபிடிப்பாலும், எக்ஸ் கதிர் கண்டுபிடிப்பாலும், ஆய்வகங்களில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகளாலும் உறுப்புகள் சார்ந்து ஒரு வித மருத்துவம் வளர்ந்து விட்டது.
சித்த மருத்துவத்தில் இதேபோல பல்வேறு விதமான அணுகுமுறை உள்ளது. அதாவது நோய்களை வகைப்படுத்தும் முறைகள் பல்வேறு காணப்படுகின்றன.
siththa maruththuvaththil4
  • அடிப்படையில் எந்த குற்றத்தின் அடிப்படையில் இந்நோய் உண்டானது என பார்த்து குணப்படுத்தும் முறை. அதாவது ஒரு நோய் வாத குற்றத்தின் அடிப்படையில் வந்தா நோயா, பித்த குற்றத்தின் அடிப்படையில் வந்த நோயா அல்லது கப குற்றத்தின் அடிப்படையில் வந்த நோயா என பார்த்து அதன் அடிப்படையில் நோயை குணப்படுத்துவது. இதில் பெரும்பாலான நோய்கள் அடங்கியிருக்கும்.
  • நோயில் காணும் குறிகுணங்கள் அடிப்படையில் சிகிச்சை அளித்தல். உதாரணமாக காய்ச்சல், பேதி, செரியாமை, மூலம், தோல் நோய்கள், ஈரல் நோய்(மஞ்சள் காமாலை), குடல் புண், ஆஸ்துமா போன்ற நோய்கள். (இவை மட்டுமல்ல, உதாரணத்திற்காக ஒன்றிரண்டை குறிப்பிட்டேன் அவ்வளவுதான்)
  • அளிக்க வேண்டிய சிகிச்சை அடிப்படையில் நோய்களை வகுத்தல்.
              உதாரணமாக:
i. பேதி கொடுக்க வேண்டிய நோய்கள்
ii. ஆவி பிடிப்பதற்குரிய நோய்கள்.
iii. உடலில் மருந்து எண்ணெய்களை தடவி முறைப்படி பிடித்து விடுவதால் தீரும் நோய்கள்.
iv. இரத்தத்தை வெளியேற்றுவதால் தீரும் நோய்கள்(Blood letting)
  •  வாந்தி செய்ய வேண்டிய நோய்கள்.
  •  உள் மருந்துகளால் குணமாக்க வேண்டிய நோய்கள்.
                i) மூலிகைகளாலும், உபரசங்களாலும் தீர்க்க (Salts) வேண்டிய நோய்கள்.
                ii) தாதுப்பொருட்களாலேயே (Minerals)குணமாக்க வேண்டிய நோய்கள்.
அறுவை சிகிச்சை உள்ளிட்ட (அசுர மருத்துவம்) சில புற மருத்துவத்தால் தீர்க்க வேண்டிய நோய்கள் (25 விதமான அறுவை சிகிச்சை முறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.)
இப்படி பல்வேறுவிதமாகசிகிச்சை அடிப்படையில் நோய்களை வகுத்து எவ்வித நோய்களையும் சித்த மருத்துவத்தில் குணமாக்க முடியும்.
இன்று பட்ட மேற்படிப்பு என எடுத்துக்கொண்டால் (M.D)
ஆறு துறைகளில் மட்டும் படிப்புகள் உள்ளன.
M.D – குணபாடம் (மருந்தியல்) (Pharmacology)
M.D–மருத்துவம்(Medicine)
M.D –குழந்தை மருத்துவம்(Pediatrics)
M.D – சிறப்பு மருத்துவம்(Special Medicine)
M.D – நஞ்சு மருத்துவம்(Toxicology)
M.D –நோய் இயல் (Pathology)
ஒரே விதமான தத்துவ அடிப்படையைக் கொண்டதாக இருந்தாலும், எல்லா நோய்களையும் குணமாக்கும் மருந்துகளும், மருத்துவ முறைகளும், புற சிகிச்சை முறைகளும் இருந்தாலும் துறை ரீதியாக வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்(“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்;உள்ளத்தனைய(து) உயர்வு” ), சித்த மருத்துவத்தை பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாததே, அதை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த இணைய இதழில் தொடர்ந்து எழுதி வருகிறேன். படித்து பகிருங்கள்.
சித்த மருத்துவம் பற்றிய சரியான அறிமுகம் தொடரும்.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 944431729

பைத்தியம் என்றால் கூட பயமில்லை, பத்தியம் என்றால்தான் பயம்

Dr.Jeromeஒரு சித்த மருத்துவரிடம் கிட்டத்தட்ட அனைவரும் கேட்டுவிடும் கேள்வி இது, “டாக்டர், இதற்கு பத்தியம் இருக்கனுமா?”. இவர்கள் மனதில் இருக்கும் எண்ணம் என்னவென்றால், “சித்த மருந்துகள் சாப்பிடும்போது கண்டிப்பாக பத்தியம் இருக்க வேண்டுமாம், அப்படி பத்தியம் இருக்க தவறிவிட்டால் மிகவும் ஆபத்தாக எதுவும் நடந்துவிடும்” என நினைக்கிறார்கள். எப்படியோ தொன்றுதொட்டு இப்படி ஒரு பயம் மக்களிடம் பரவி இருந்து வருகிறது.
மேலும் ஒரு சிலர் இதனாலேயே சித்த மருத்துவம் எடுப்பதற்கு தயங்குகிறார்கள். இவையெல்லாம் தவறான புரிதல்.
paththiyam1பத்தியம் என்றால் என்ன?
இதற்கு மிக நீண்ட விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருக்கமாக விளக்குகிறேன். ஒரு நோய்க்கு மருந்து இதுதான் என மருத்துவர் தீர்மானித்து, அதை நோயாளிக்கு கொடுக்க, நோயாளியும் அந்த மருந்தை சரியாக சாப்பிட்டு விடுவார். ஆனால் அந்த மருந்து அதன் முழுமையான வீரியத்தில் உடலில் உட்கிரகிக்கப்பட்டு செயல்பட்டால்தான் நோய் குணமாகும். அப்படி இல்லாமல், அந்த மருந்தின் செயல்பாட்டை குறைக்கும் விதத்தில் ஏதேனும் உணவுகளை அதனுடன் சேர்த்து சாப்பிட்டால் மருந்தின் வீரியம் கெட்டுவிடும். மருந்து உடலில் செயல்படாது அவ்வளவுதான்.
எனவே ஒவ்வொரு மருந்தைக் கொடுக்கும் போதும் அதன் செயல்பாட்டைத் தடுக்கும் விதத்தில் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்து விடுங்கள் என கூறுவோம். இதுதான் பத்தியம், மற்றபடி பத்தியத்தை கடைப்பிடிக்காவிட்டால் விபரீதமாக ஒன்றும் நடந்துவிடாது.
நோய் → அதற்கு மருந்து → அதற்கு பத்தியம் என, நோய் வந்த பிறகு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், அதற்கு பத்தியம் இருக்க வேண்டும் என்பது, உங்களுக்குப் புதிதாக கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகத் தெரியலாம். ஆனால் அப்படியல்ல, நோய் இல்லாத நல்ல உடல் நிலையில் இருக்கும் போதும் நாம் உண்ணும் உணவுக்குக்கூட பத்தியம் உள்ளது. எல்லோருமே எல்லா நாட்களுமே ஒரு விதத்தில் பத்தியம் கடைபிடிக்கத்தான் வேண்டும்.
இதென்ன புது கதையாக இருக்கிறதே என நினைக்கிறீர்களா?
ஒரு புரிதலுக்காக திருவள்ளுவரை துணைக்கு அழைக்கிறேன்.
திருக்குறளில் ‘மருந்து’ என ஒரு அதிகாரம் உள்ளது. அதில்
“அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து” என்று ஒரு குறள் உண்டு.
மேலும்
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”
என்று ஒரு குறளும் உள்ளது.
இதில் “மாறல்ல துய்க்க” என்றால் மாறுபாடு இல்லாத, அதாவது ஒன்றுக்கு ஒன்று மாறுபடாத உணவை உண்ண வேண்டும் என்பது மிகவும் சாதாரணமான ஆரோக்கிய அறிவுரை.
மேலும் “மாறுபாடு இல்லாத உணவை சாப்பிடாமல் தவிர்த்து வந்தால் உடலுக்கு ஊறுபாடு (பாதிப்பு) இல்லை எனவும் பொருள்.
மாறுபாடு இல்லாத உணவுகள் என்றால் என்ன?
மருந்துகள் மட்டுமல்ல ஒவ்வொரு உணவுப்பொருட்களும் உடலில் ஒரு செயலை செய்கிறது. ஒரு குறிப்பிட்ட செயலை உடைய உணவையும், அதற்கு நேர் எதிரான செயல் உடைய உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிடும்போது அது உடலில் தவறான விளைவை உண்டுபண்ணுகிறது.
(ஊறுபாடு – Toxic)
paththiyam2உதாரணமாக பால் உண்டவுடன் அமிலத்தன்மை உள்ள (புளிப்புத்தன்மை) பழங்களை சாப்பிடக்கூடாது.
முள்ளங்கி, கீரை சாப்பிட்ட பிறகு பால் அருந்தக்கூடாது.
மீன் சாப்பிட்டவுடன் பால் அருந்தக் கூடாது.
தயிர்சாதம் சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடக்கூடாது.
paththiyam3இப்படி பெரிய பட்டியல் கூறலாம். ஆனால் உதாரணத்திற்கு ஒன்றிரண்டைக் குறிப்பிட்டேன். இங்கே பால், தயிர், கீரை, மீன், வாழைப்பழம், முள்ளங்கி ஆகியவை மருந்துகள் இல்லையே.
ஆனாலும் இவைகளை கலந்து உண்பதால் அவைகளின் குணபேதங்களால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
உணவிலேயே இப்படி பத்தியம் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட செயல்பாடுள்ள மருந்துகளுக்கு சில ஒன்றிரண்டு உணவுப்பொருட்களை தவிர்த்துவிடுங்கள் என கூறுவதுதான் வளர்ச்சியடைந்த மருத்துவமுறை.
எல்லா மருத்துவ முறைகளிலும் பத்தியம் கூறப்படுகிறது.
உதாரணமாக உங்களுக்குத் தெரிந்த சில பத்திய முறைகளையே கூறுகிறேன்.
-               சிறுநீரக நோயாளிகள் உப்பு தவிர்க்கவும்.
-               தோல் நோயாளிகள் மீன், கத்தரி தவிர்க்கவும்.
-               இதய நோயாளிகள் கொழுப்பு தவிர்க்கவும்.
-               ஆஸ்துமா நோயாளிகள் புகை, தூசு தவிர்க்கவும்.
-               கல்லீரல் நோயாளிகள் மது தவிர்க்கவும்.
-               சர்க்கரை நோயாளிகள் இனிப்பு தவிர்க்கவும்.
இப்படியெல்லாம் எல்லா மருத்துவ முறைகளிலும் கூறப்படுகிறது.
அப்படியானால் பத்தியத்தில் மற்ற மருத்துவ முறைகளுக்கும் சித்த மருத்துவ முறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என நீங்கள் கேட்கலாம்.
மற்ற மருத்துவ முறைகளில் எல்லாம் நோய்க்குத்தான் பத்தியம் கூறப்படுகிறது. ஆனால் சித்த மருத்துவமுறையில்,
  • நோய்க்கும் பத்தியம் கூறப்படுகிறது.
  • மருந்து உடலில் நன்கு செயல்படுவதற்கும் பத்தியம் கூறப்படுகிறது.
  • நோயாளியின் நாடி அறிந்து அவர் வாத நோயாளியா, பித்த நோயாளியா, கப நோயாளியா என அறிந்து அதற்கு ஏற்பவும் பத்தியம் கூறப்படுகிறது.
  • நல்ல உடல்நிலையில் உள்ளவர்களுக்குக்கூட உணவை மாறுபாடில்லாமல் உண்பதற்கும் பத்தியம் கூறப்படுகிறது.
அந்த அளவிற்கு உணவையும், மருந்தையும் பற்றிய முழுமையான அறிவு சித்த மருத்துவத்திற்கு இருக்கிறது.
ஆக பத்தியம் என்பது ஒரு முன்னேறிய மருத்துவ அறிவுரைதானே தவிர அதில் பயன்படுத்துவதற்கு ஒன்றுமில்லை.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293