Wednesday 30 September 2015

சித்த மருந்துகளின் வடிவங்கள்

Dr.Jeromeஒரு மருத்துவர் என்றால் யார்?, அவர் என்ன செய்வார்? என்று ஒரு குழந்தையிடம் கேட்டுப்பாருங்கள். எல்லா குழந்தைகளும் இப்படித்தான் பதில் சொல்லும், “டாக்டர் ஊசி போடுவார்”. குழந்தைகளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று நான் கூறிவிடமாட்டேன், பெரியவர்களுக்குத் தெரிந்ததும் அவ்வளவுதான். மருந்து என்றால் என்ன? நோயைக் குணமாக்கும் ஒரு பொருள். அதை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
siththa marundhugalin vadivam11மருந்து என்றாலே ஊசி, மாத்திரை, டானிக் முடிந்தது. இதுதான் பெரியவர்களின் புரிதலும் கூட. மாத்திரை என்பது மருந்தின் ஒரு வடிவம். அதை வாய்வழியே கொடுத்தும் செயல்படாது என்ற நிலையில் அல்லது வாய்வழியே கொடுக்க முடியாத நேரத்தில், ஒரு ஊசியின் வழியே உடலுக்குள் அந்த மருந்து செலுத்தப்படுகிறது. அதேபோல அந்த மருந்து திரவவடிவில் டானிக்காக கொடுக்கப்படுகிறது.
இவையெல்லாம் மருந்துகளின் வடிவங்கள்.
இப்படி சித்த மருத்துவத்தில் மருந்துகள் எத்தனை வடிவங்களில் உள்ளது தெரியுமா?. 32 வடிவங்களில் சித்த மருந்துகள் செய்யப்படுகின்றன. அவற்றைப் பற்றிய மிகச் சுருக்கமான ஒரு அறிமுகத்தை தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கொடுப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
siththa marundhugalin vadivam10
32 வகையான சித்த மருந்துகள்:
  1. சுரசம்
  2. சாறு
  3. குடிநீர்
  4. கற்கம்
  5. உட்களி
  6. அடை
  7. சூரணம்
  8. பிட்டு
  9. வடகம்
  10. வெண்ணெய்
  11. மணப்பாகு
  12. நெய்
  13. ரசாயணம்
  14. இளகம் (இலேகியம்)
  15. எண்ணெய் (தைலம்)
  16. மாத்திரை
  17. கடுகு
  18. பக்குவம்
  19. தேனூரல்
  20. தீநீர்
  21. மெழுகு
  22. குழம்பு
  23. பதங்கம்
  24. செந்தூரம்
  25. பற்பம்
  26. கட்டு
  27. உருக்கு
  28. களங்கு
  29. சுண்ணம்
  30. கற்பம்
  31. சத்து
  32. குரு குளிகை
இதில் எத்தனை வகையான மருந்துகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்?
siththa marundhugalin vadivam12சமீபத்தில் நிலவேம்பு “குடிநீர்” பிரபலமானதால் குடிநீர் என்று ஒரு மருந்து வடிவம் உங்களுக்கு தெரியவந்திருக்கும். ஏதாவது இலை அல்லது கனியிலிருந்து எடுக்கப்படுவது “சாறு” என்று தெரிந்திருக்கும், “சூரணம்” என்பதையும் தெரிந்திருப்பீர்கள். மாத்திரை, இலேகியம் என்பவை மிகவும் பிரபலம். மிதமிஞ்சிப் போனால் “பஸ்பம்” (பற்பம்) என்ற மருந்தையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆக ஐந்து அல்லது ஆறு விதமான வடிவங்களில் சித்த மருந்துகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் 32 வகையான வடிவங்களில் சித்த மருத்துவத்தில் மருந்துகள் செய்யப்படுகின்றன.
ஒரு மருந்தை உடலுக்குள் செலுத்திவிட்டால் மட்டும் போதாது. அந்த மருந்தை உடல் உட்கிரகிக்க வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு “இரத்த சோகை” நோய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். அவருக்கு “இரும்பு” கொடுக்கப்பட வேண்டும். இரும்பு என்பது ஒரு உலோகம் அதை அப்படியே சாப்பிட்டால் சீரணம் ஆகாது. ஆனாலும் இரும்பைத்தான் கொடுக்க வேண்டும், என்ன செய்வது?. இரும்பை உடல் சீரணிக்கும் வடிவத்திற்கு மாற்ற வேண்டும். அப்படி மாற்றும் ஒரு வடிவம்தான் “பற்பம்” (பஸ்பம்). அதாவது “அயபற்பம்” (இரும்பு பற்பம்).
siththa marundhugalin vadivam8சரி, இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், “அப்படியானால் இரத்த சோகை உள்ளவர்களுக்கு உங்கள் மருந்துச்சீட்டில் எழுதப்படும் மருந்து ‘அயபற்பம்’ என்பதுதானா?” என நீங்கள் கேட்கலாம்.
இல்லை, முதலில் நோயாளியின் உடல் நிலையைப் பார்க்க வேண்டும், அவர் நாடி நிலையை பரிசோதிக்க வேண்டும், தேவைப்பட்டால் மேற்கொண்டு பரிசோதனைகளை எடுக்க வேண்டும். பின்னர் மூலிகை மருந்துச் சரக்குகளால் ஆன மருந்துகளால் குணமாக்க முடியுமா என்பதை கணிக்க வேண்டும்.
உதாரணமாக கீழ்கண்ட வடிவங்களில் உள்ள மருந்துகளில் ஏதேனும் ஒரு வடிவத்தில் அவருக்கு மருந்தை முடிவு செய்யலாம்.
உதாரணம்:
சூரணம் – கரிசாலை சூரணம்
இலேகியம் – கரிசாலை இலேகியம், நெல்லிக்காய் இலேகியம்
செந்தூரம் – காந்த செந்தூரம், அயகாந்த செந்தூரம், சுயமாக்கினி செந்தூரம்
பற்பம் – அயபற்பம்
சாறு – நெல்லிக்காய் சாறு
கற்பம் – கரிசாலை கற்பம், அயபிருங்கராக கற்பம்
குடிநீர் – மண்டுராதி குடிநீர்.
இப்படி பல்வேறு வடிவங்கள் நோய்க்கான காரணம் அறிந்து மருந்துகள் வழங்கப்படுகின்றன.
சித்த மருத்துவத்தில் இதற்கான ஒரு தத்துவம் உள்ளது.
“வேர்பாரு தலைபாரு மிஞ்சினக்கால்
மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரே…”
அதாவது முதலில் தாவர மருந்துச் சரக்குகளால் ஆன மருந்துகளைக் கொண்டு நோயினை குணமாக்க முயற்சி செய்ய வேண்டும். நோய் குணமாகாவிடில் பின்னர் பற்பம், செந்தூரம் போன்ற பெரிய மருந்துகளை செந்தூரம் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.
அதென்ன பெரிய மருந்துகள்?” என நீங்கள் கேட்கலாம். மருந்தின் சக்தி (Potency) வடிவங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. உதாரணமாக ஒரு மருந்தை பொடி செய்து பயன்படுத்துவதற்கும், குடிநீராக பயன்படுத்துவதற்கும், இலேகியமாக பயன்படுத்துவதற்கும், மாத்திரையாக பயன்படுத்துவதற்கும், பற்பமாக பயன்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
மருந்தின் வீரியங்களைப் பற்றி விளக்க நிறைய உதாரணங்கள், விளக்கங்கள் கொடுக்கலாம். ஆனால் ஒரே ஒரு உதாரணத்தைக் கொடுத்து இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.
ஒரு மருந்துச் சரக்கை இடித்து பிழிந்து எடுப்பது “சாறு” இதன் ஆயுள் காலம் எவ்வளவு தெரியுமா? (Expiry Period) மூன்று மணி நேரம்தான்.
ஒரு குடிநீர் மூன்று மணி நேரம் தான் அதன் மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கும். அதன் பிறகு செயலிழந்து விடும்.
மாத்திரை ஒரு வருடம் ஆயுள் காலம் உள்ளது. (தயாரிக்கும் முறையைப் பொருத்து சற்று வேறுபடும்.)
“பற்பம்” என்ற ஒரு வடிவத்தை கூறினேனே, அதன் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா? 100 ஆண்டுகள்.
இப்படி சித்த மருந்துகளில் வடிவமும், வீரியமும் தயாரிப்பு முறைகளும் கடல் அளவு இருக்க, இன்னும் “சிறுநீரக செயலிழப்பா?, ஒரு பிடி துளசியோடு…” என மூலிகை மருத்துவம் எனவும், நாட்டுவைத்தியம் எனவும் சிறுபிள்ளைத்தனமாக சித்த மருத்துவத்தை ஒப்பிட்டுப் பேசுவதை மாற்றுவதற்கு இந்தக் கட்டுரை பயன்படுமானால், அது சித்த மருத்துவத்தைப் பற்றிய சரியான புரிதலுக்கு ஒரு வெற்றி.
மிகப்பெரிய ஒரு தலைப்பை மிகமிகச் சுருக்கமாக உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். மற்றவர்களுக்கும் இதைப் பகிருங்கள்.
சித்த மருத்துவம் வளரும்.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 944431729

No comments:

Post a Comment